நல்வரவு_()_


Tuesday 25 December 2012

எனக்கே எனக்கா?:)

என்னாது.. எனக்கா? நானா?:))



மெயிலில் அனுப்பிட்டு இருந்தேன்ன்... இப்போ ஜல் அக்கா சொல்றா.. அங்கு இணைக்க கஸ்டமா இருக்காம், அனைத்தையும் ஒரு பதிவில் போட்டு லிங்கொடுங்கோ என... அதனால பாருங்கோ.. இப்போ எல்லாம் ஒண்டாப் போடப்போறன்.. பார்த்து ரசியுங்கோ. எனக்கெப்பவும் செய்வன திருத்தமா இருக்கோணும்..

1.வெண்டிக்காய் வெள்ளைக்கறி

 
வெண்டிக்காய் - 300g
வெங்காயம் - 20g
பூண்டு - 2 பல்லு
வெந்தயம் - 1 தே.க
மஞ்சள்தூள் - 1/2 தே.க
எலுமிச்சம்புளி - 2 மே.க
பால் - 75 ml
உப்பு - 1தே.க

செய்முறை
;அனைத்தையும் ஆயத்தமாக எடுக்கவும்.

;வெண்டிக்காயைக் கழுவி, பின் துண்டுகளாக வெட்டி, சமைக்கும் பாத்திரத்தில் போட்டு, எலுமிச்சம்புளியைப் பிளிந்து விட்டுப் பிரட்டவும்.
;அதன்மேல் வெங்காயம், பூண்டை சிறு துண்டுகளாக வெட்டிப்போட்டு, வெந்தயமும் போடவும்.
;உப்புப் போட்டு, 100 மி.லீ தண்ணீர் விட்டு மூடி அவிய விடவும்.
;அவிந்ததும் மஞ்சள்தூள், பால் சேர்த்து கொதிக்க விடவும்.

;நன்கு கொதித்ததும் இறக்கவும்.
;சுவையான வெண்டிக்காய் பால்க்கறி தயார்.
( விரும்பினால், 3 பச்சை மிளகாய் சேர்க்கவும்.) 
===============================================

2.எக் அண்ட் சொசேஜ் ரோஸ்ட்

(Egg and sausage toast)
 

மெல்லிய சொவ்ட் பிரெட் -4 துண்டுகள்
முட்டை - 2
சொசேஜ் - 50g
மிளகாய்த்தூள் - 1/2 தே.க
உப்பு - 1 தே.க
எண்ணெய் - 2 மே.க
பட்டர்/மாஜரின் - பிரெட்டுக்குப் பூசுவதற்கு.

 செய்முறை:-
>எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்துக்கொள்ளவும். பாண் துண்டுகள் மெல்லியதாகவும் கரையை நீக்கியதாகவும் எடுத்துக்கொள்ளவும்.

>முட்டை, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.
> சொசேஜை சிறிய சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
>ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து, வெட்டிய சோசேஜை நன்கு வாட்டி எடுத்து, அடித்த முட்டைக்கலவையுடன் சேர்த்துக் கலக்கவும்.

>இப்போ மிகுதி எண்ணெய் விட்டு, இந்தக் கலவையை, அப்பம்போல் குறைந்த தீயில் பொரித்து எடுக்கவும். பிரெட் துண்டுகளுக்கு, ஒரு பகுதிக்கு மட்டும் நன்கு மாஜரின்/பட்டர் 
பூசிக்கொள்ளவும்.
>இப்போ அந்த அப்பத்தை, அளவாக வெட்டி, பிரெட் துண்டில் வைத்து மூடி,ரோஸ்ரரில் வைத்து மூடவும். ரோஸ்ரர் லைட், றெட் லைட்டுக்கு மாறும்வரை ரோஸ்ட் பண்ண விடவும் (நன்கு).

>லைட், ரெட்டுக்கு மாறிய உடனேயே பிரெட்டை வெளியே எடுக்கவும். அழகாக வெட்டப்பட்டிருக்கும். இல்லையெனில், அந்த அடையாளத்தின்மேல், மெதுவாக 
கத்தியால் வெட்டிப் பிரிக்கவும். 
சுவையான இலகுவான ரோஸ்ட் ரெடி.
(இப்படிச் செய்து, வேலைக்குஎடுத்துப் போகலாம். சாண்விச் பைகளில் 
அல்லது அலுமினியப் பேப்பர்களில் நன்கு 
சுற்றிக் கொடுக்க வேண்டும்.)
 ========================================
3.மீன் சொதி


சுத்தம் செய்த மீன் துண்டுகள் - 250 g

பழப்புளி -  (சிறிய உருண்டை)

வெங்காயம் - 15g 
உள்ளி - 4 பற்கள்
பச்சை மிளகாய் -2
பால் - 100ml
வெந்தயம் - 1தே.க
மஞ்சள்தூள் -1/4 தே.க
கரம்மசாலாத்தூள் - 1/4 தே.க
உப்பு -1 1/2தே.க
கறிவேப்பிலை 1 நெட்டு.

செய்முறை:
>எல்லாப் பொருட்களையும் தயாராக எடுத்துக்கொள்ளவும்.

>உள்ளி, வெங்காயத்தை சிறுதுண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் போடவும். மிளகாயை நடுவில் பிளந்து போடவும். அதனுடன் வெந்தயத்தையும் போடவும்.
>அதன்மேல் மீன் துண்டுகளைப்போட்டு, 300 மில்லி லீற்றர் தண்ணீரில் புளியைக் கரைத்துவிட்டு, உப்பையும் போட்டு அடுப்பில் வைக்கவும்.
>பாதி அவிந்ததும், மீன் துண்டுகளைப் பிரட்டி நன்கு வேக விடவும்.
>நன்கு அவிந்ததும் மஞ்சள்தூள், கரம்மசாலாத்தூள், பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.

>நன்கு கொதித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, இறக்கவும்.
>சுவையான மீன் சொதியைச் சூட்டோடு பரிமாறவும். 
=================================================
4.ஹொலிபிளவர் பொரியல்


தேவையான பொருட்கள்
ஹொலிஃப்லவர் - 400 g
எண்ணை - 4 மே.க
கடுகு - 1 தே.க.
சோம்பு - 1/2 தே.க.
கடலை பருப்பு - 1 மே.க.
வெங்காயம் - 40 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 மே.க.
உப்பு - 1/4 மே.க.
எலுமிச்சம்புளி - 2 தே.க.

செய்முறை:
தேவையானவற்றை எடுத்துக்கொள்ளவும். 

ஹொலி பிளவரை பெரிய பூக்களாக வெட்டி எடுக்கவும். வெங்காயத்தை, சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணெய் சேர்த்து, வெங்காயத்தைப் போட்டு சிறிது வதங்கவிடவும். 
பின்னர் அதில், கடுகு, சோம்பு, கடலைப்பருப்பைப் போட்டு வதக்கவும்.
வதங்கியதும், தூளைக்கொட்டிக் கிளறவும்.

ஹொலிபிளவர் பூக்களைக் கொட்டிப் பிரட்டவும்.
 75 மி.லீற்றர் சுடுநீர் விட்டு, மீதி உப்பையும் சேர்த்து, மூடி அவிய விடவும்.

நீர் வற்றி அவிந்ததும், இறக்கி தேசிக்காய் விட்டு, நன்கு பிரட்டிவிடவும்.
சுவையான ஹொலிபிளவர் பொரியல் தயார்.
================================================
5.அவொகாடோ(Avocado) ஜூஸ்



பழுத்த அவொகாடோ பழம் - பாதி
சீனி (sugar) - ஒரு மேசைக் கரண்டி.
பசுப்பால் - ஒரு கப்.

அனைத்தையும் ஒன்றாகப் போட்டு மிக்ஸியில் அடித்து எடுக்கவும்.
=====================================
பின்னூட்டங்கள் மூடிவிட்டேன்ன்.. 
இப்படி இன்னொரு பதிவையும் போடப்போறேன்ன்..
 ஹையோ எனக்கு இன்று நேரமும் இல்லை:((
பார்ட்டிக்குப் போறோம்ம்.. அடுத்த பதிவை பின்னேரம்தான் போடுவேன்ன்..
மெயிலில் அனுப்பிப்போட்டு சிவனே என இருந்தேன்.... 
இப்போ இப்படி ஆச்சு என் நிலைமை:)
=====================================

கொஞ்சம் பொறுங்கோ.. போட்டி முடிவுகள் எனவுன்ஸ்ஸ் பண்ணிக் கேட்குதே:) எனக்கு ஆராவது சுட்டாறிய தண்ணி தெளியுங்கோ.:))